தமிழா தலை நிமிர்...

Saturday, July 18, 2009

இலங்கையில் உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்

இலங்கையில் செயற்படும் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு மகிந்த அரசாங்கம் கடுமையான சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:குறிப்பாக இத் தன்னார்வ நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்தே தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தன்னார்வ நிறுவனங்கள் வருடாந்த நிதியறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வருடம்தோறும் தங்களது நிறுவனங்களை மீள் பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர் சுயவிபரங்கள் மற்றும் நடவடிக்கைள் மீளாய்வு செய்ய வேண்டும். தன்னார்வ நிறுவனங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டால் அவர்களை நாடு கடத்தவும் அரசாங்கம் பின் நிற்காது.தற்பொழுது, இலங்கையில் 696 உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்களும், 309 வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவனங்களும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

ஜாதிவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்

காமராஜர் படத்தை ஒரு காங்கிரசார் திறந்து வைத்து அவருடைய அருமை பெருமைகளைப் பாராட்டிப் பேசினால், அது அவரது கடமையாக இருக்கலாம் அல்லது அவர் ஏதாவது பெற்றதற்காக இருக்கலாம் அல்லது பெறலாம் என்கிற ஆசை காரணமாக இருக்கலாம். நான் அவரது படத்தைத் திறக்கிறேன் என்றால், அவர் தமிழகத்திற்கு நன்மை என்பதற்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்துதான் உன்னதமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்-கள் கூறியிருக்கிறார்கள். வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்குப் பூமியின் அழுத்தத்தால் கீழே அடங்கி நடுங்கிக் கிடந்த கரித்துண்டு-தான். அதுபோல நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றிய வைர மணிகளில் ஒருவரே காமராஜர். அவர் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்றாலும் அவரை நான் போற்றுவதற்கு இது ஒரு காரணம் என 23.4.1967 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் காமராஜர் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அப்போது முதல்வரான, பேரறிஞர்அண்ணா ஆற்றிய உரைதான்இது. மாற்றுக் கட்சித் தலைவர்களும் போற்றத்தக்க வகையில் தம் தூய்மையான அரசியல் பணியை அமைத்துக் கொண்டார் காமராஜர்.

மாற்றுக் கருத்துக்கொண்ட இணையத் தளங்களை முடக்க சிறிலங்கா அரசு தீர்மானம்

சிறிலங்கா அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள் அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருக்கின்றது.அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது' என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான 'தினமின' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள் எனவும் தினமினவின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.