தமிழா தலை நிமிர்...

Wednesday, April 8, 2009

சிந்தனைத் துளி

தமிழ்ப்பற்று

குன்றக்குடி அடிகளார் எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர் இராணுவத்தில் பேருந்து ஓட்டுநராகச் சேர இருந்தார். அவரது தமிழ்ப்பற்று அவரை குன்றக்குடி மடாதிபதி ஆக்கியது.

பதவிக்கு விளக்கம் சொன்ன வள்ளலார்

பசித்திரு!
தனித்திரு!!
விழித்திரு!!!

இதுதான் காமராஜ் பாணி

அரசுக் கல்லூரியில் ஆ.ளுஉ., இயற்பியல் படிக்க ஒரு மாணவருக்கு சிபாரிசு செய்தார் காமராசர். அப்போது அவர் தமிழக முதல்வர். கல்லூரி முதல்வரோ, இயற்பியல் படிக்க 12 பேருக்கு மட்டுமே லேப் வசதி இருப்பதால் , காமராசர் சிபாரிசு செய்த மாணவன் 13ஆவது நபர் என்பதால் செய்வதறியாது கைபிசைந்தார்.
காமராசர் ஒரு யோசனைசொன்னார். 12 பேருக்கு மட்டுமே சமைக்கப் பாத்திரம் இருக்க, திடீரென 22 பேர் விருந்தினர் வந்தால் இரண்டு முறை சமைக்க மாட்டோமா? அப்படிச் செய்யுங்க! - என்றார். இப்படித்தான் கல்லூரி களில் ஷிப்ட் முறை (Shift System) வந்தது?


அப்பனுக்கு அப்பன்!

உலகப் போர் முடிந்து மூவரும் கூடினர்.

சர்ச்சில்: கடவுள் கனவில் தோன்றி நடந்து முடிந்தபோரின் வெற்றிக்கு காரணம் உன் ராஜதந்திரமே என்றார்.

ரூஸ்வெல்ட்: நிச்சயமா அப்படி இருக்க முடியாது. ஏனெனில் கடவுள் என் கனவில் வந்து அமெரிக்கா தந்த போர்க் கருவிகள்தான் வெற்றிக்கு காரணம் என்றாரே!

ஸ்டாலின்: நான் யாருடைய கனவிலும் வரவில்லையே!


பிரபாகரன் மீது துரும்பு விழுந்தால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்: வைகோ

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்கதேசம் போல தமிழீழமும் மலர்ந்திருக்கும். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் சுட்டுக்கொன்றான். அது கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் தொடர்புடைய ஜெகதீஸ் டைட்லர் குற்றமற்றவர் என்று மத்திய புலனாய்வுப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒரு சீக்கிய செய்தியாளர் வினா எழுப்பியபோது, கிண்டலாக விடையளித்துள்ளார். அதனால் அவர் மீது அந்த சீக்கிய செய்தியாளர் செருப்பை வீசியிருக்கிறார். ஆனால் அந்த செருப்பு அவர் மீது படவில்லை. அதற்காக அகாலிதளம் அந்தச் செய்தியாளருக்கு 2 லட்சம் ரூபா பரிசு அறிவித்திருக்கிறது.

தமிழர்களும் வீரத்திற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். அதையும்
கொச்சைப்படுத்தியது கலைஞர் அரசு. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் ஒரு மடலை முதல்வர் கலைஞருக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த மடலில் இதுவரை சொல்லாத இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆறு மாதமாக போர் நிறுத்தம் தொடர்பாக பேசாத சோனியா, இப்போது போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்துகிறார் என்றால், அம்மடலே தேர்தல் இலாபத்திற்காக கலைஞரால் தயாரிக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் நாங்கள் துடித்துப் போவோம். அவர் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். புலிகளை அழிக்க முடியாது. சில பேர் கணக்குப் போடுகின்றனர். சிலர் கவிதை எழுதியும் வைத்திருக்கின்றனர். ஆனால் இறுதியில் விடுதலைப் புலிகளே வெல்வார்கள் என்றார் வைகோ.

முன்னதாக உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இலங்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர். சிறிலங்கா அரசுக்கு கடன் வழங்குவதற்கு அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் போர் நடப்பதால் கடன் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டன.

ஆனால் வளர்ச்சிக்காக என்று சொல்லி சிறிலங்காவுக்கு கடனை வழங்கிய ஒரே நாடு இந்தியாதான். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்களாக நாங்கள் போராட்டம் நடத்த வந்தோமே தவிர வாக்கு கேட்பதற்காக அல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் உரையாற்றிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ஈழத் தமிழர்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றனர். அங்கு சிங்கள அரசு விச வாயு குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று வருகின்றது.

உலக நாடுகள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நாமும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகின்றோம். தமிழக மக்கள்
நடுவில் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Sunday, April 5, 2009

படையினரின் இறுதிக்கட்டத் தாக்குதல் திட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலையாகும் அபாயம்..

வன்னியின் பாதுகாப்பு வலயம் மீது இறுதிக்கட்டத் தாக்குதலுக்கு தயாராகி வரும் படையினர் மிக மோசமான தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது களமனையில் மிக மோசமான இழப்புக்களை சந்தித்து வரும் படையினர் பெரும் அழிவுகளைச் சந்திப்பதற்கு இடையில் தமது முழுமையான பலத்தைப் பயன்படுத்தி மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து தாக்குவதற்கு தயாராகி வருவதாக சிறிலங்கா தரப்பு செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர் பெரும் வெற்றிச் செய்தியொன்றை அறிவிப்பதற்கு காத்திருக்கும் சிறிலங்கா, மிக மோசமான தாக்குதல் ஒன்றை நடத்தவுள்ளதை களமுனைச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

ஏற்கனவே, இந்திய ஆட்சியிலுள்ள கொங்கிரஸ் மத்திய அரசும் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தமது முழுமையான படை வளத்தைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடுப்பதற்கு சிறிலங்கா முடிவு செய்துள்ளது. படையினர் இவ்வாறான ஒரு பாரிய நடவடிக்கையில் இறங்கினால் ஏற்கனவே தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் படையினரால் படுகொலையாகி வரும் நிலையில், இவ்வாறான தாக்குதல் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் ஆயிரக்கணக்கான மக்களை உயிரிழக்க வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிக்குள் ஐந்து முனைகளில் ஒரே வேளையில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு உட்பிரவேசிப்பதற்கு சிறிலங்கா படையினர் தயாராகி இருப்பதாக களமுனை மற்றும் கொழும்பு படைத் தலைமையக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பச்சைப்புல்மோட்டைப் பகுதி கடுமையான மோதல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயப் பிரதேசம் படையினரால் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற கடுமையான மோதல்களையடுத்தே இப்பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்பகுதியைப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் 58 ஆவது படையணியினர், 53 ஆவது படையணியினருடன் இணைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையிலேயே சிறிலங்கா படையினரின் பலம் வாய்ந்த ஐந்து படையணிகள் வன்னியில் பெருந்தொகையான பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஐந்து முனைகளினால் பிரவேசிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பதையிட்டு களமுனைத் தளபதிகளுடன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவதற்காகவே சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை அவசரமாக வவுனியாவுக்குச் சென்றிருந்ததார்.

களமுனையில் உள்ள முக்கிய மூத்த தளபதிகளும் இராணுத் தளபதியுடனான இந்தச் சந்திப்புக்காக நேற்று அவசரமாக வவுனியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இராணுவத் தளபதியுடனான ஆலோசனைகளையடுத்து களமுனைத் தளபதிகள் உடனடியாகவே முல்லைத்தீவுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முக்கியமான உத்தரவுகளை இராணுவத் தளபதி பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னிப் போர் தீவிரமடைந்த போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவின் கடற்கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயமாக அறிவித்த சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோரப் பகுதிகளே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் தற்போது சுமார் மூன்று இலட்சம் மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படையின் 55 ஆவது படைப்பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 53 ஆவது படைப் பிரிவு, 59 ஆவது படைப் பிரிவு மற்றும் சிறப்புப் படைப்பிரிவு - 8 என்பன இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதியைத் தற்போது சுற்றிவளைத்திருப்பதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படைப் பிரிவுகள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் ஒன்றை நடத்தி அதற்குள் பிரவேசிப்பதற்குத் தயாராக இருப்பதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இருந்தபோதிலும், இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்திருப்பது படையினருடைய திட்டங்களைச் சீர்குலைப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதாக அமைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படையினரின் முன்னரங்க நிலைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ள விடுதலைப் புலிகள், சிறிய குழுக்களாக படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளுக்குள்ளும் பிரவேசித்து தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

கடந்த வாரத்தில் மட்டும் விசுவமடு மற்றும் கொக்காவில் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்ற விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான தக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தியிருப்பது படையினருடைய திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Friday, April 3, 2009

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் சிறிலங்கா கடற்படையால் கைது

தலைமன்னார் பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா கடற்படையின் பதில் பேச்சாளர் மகேஷ் கருணாரட்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

வழமையான சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் ஆறு படகுகளில் சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் பயன்படுத்திய ஆறு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வழமையான விசாரணைகளின் பின்னர் இந்திய உயர் தூதரகத்தின் மூலமாக இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் கடற்படைப் பதில் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு - ஹிலாரி கிளின்டன்

இலங்கை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்னெடுக்கப்பட இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் வாதியான மேரி ஜோ கில்ரோயிக்கு எழுத்தியுள்ள பதில் கடிதத்தில் அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 9ஆம் திகதி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து மேரி ஜோய் கில்ரோய் விளக்கம் கோரி கடிதம் ஒன்றை ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பியிருந்தார்.

இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும் வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் தமது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சர்வதேச உதவு நிறுவனங்கள், உதவி வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் தாம் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன.

அத்துடன் இடம்பெயர்ந்து மக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என கடித்தில் தெரிவித்துள்ளார்.