தமிழா தலை நிமிர்...

Tuesday, May 12, 2009

அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றுவதில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது: விடுதலைப் புலிகள்

அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"தமிழர்களுக்கு எதிராக தாம் முன்னெடுக்கும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினரைக் கைது செய்திருப்பதன் மூலமாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு உணர்த்தியிருக்கின்றது.

ஊடக சுதந்திரத்தை மீறும் வகையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிக்கொணர முயன்ற அவர்களுடைய 'மனிதாபிமானப் பணியை'யிட்டு ஈழத் தமிழர்கள் அவர்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

அனைத்துல சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது. தன்னுடைய இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவலத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்திருக்கின்றது. வடக்கு - கிழக்குப் பகுதியில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கும் போது, கேட்கும் போது பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கமானது தன்னுடைய இனப்படுகொலை போரை தற்போது முழு அளவில் பல முனைகளில் முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து அந்த தாயகத்தை இல்லாமல் செய்வதில் இருந்து தமிழ் மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் பல்குழல் எறிகணை மற்றும் கனரக எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் கல்வி மற்றும் வாழ்வாதாரங்களின்றி தமிழர்களைப் பலவீனப்படுத்துவது மற்றும் தடுப்புக்காவல் முகாம்களில் உள்ளவர்களை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், அனைத்துலக சமூகம் பெரும்பாலும் மெளனமாகவே இருக்கின்றது.

தெரிவு செய்யப்பட்ட சில முகாம்கள் மட்டுமே அனைத்துலக சமூகங்களின் அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான நிலையில் உள்ள ஏனைய முகாம்கள் உலகத்தின் கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் மறைக்கப்படுகின்றன.

இதனைவிட இடம்பெயர்ந்தவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 'அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி'களில் தடுத்துவைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வவுனியாவை விட இந்தப் பகுதிகளில் தடுத்து வைக்கப்படுபவர்களை பார்வையிடுவது ஊடகவியலாளர்களுக்கு மிகவும் சிரமமானதாகும்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பட்டினி போடுதல், ஊட்டச்சத்தின்மை, சுகாதாரம் போன்றன தமிழர்களுக்கு எதிரான போரில் சாட்சிகள் இல்லாத ஆயுதங்களாக சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்படுகின்றது.

இராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பால் சென்று, 'போரற்ற பாதுகாப்பு வலய' பகுதியில் உள்ள மக்களுக்கு வானூர்தி மூலம் நிவாரணப் பொருட்களைப் போடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உலகின் மனிதாபிமான சமூகத்தை நாம் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், சிறிலங்கா படைகளின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களை நடத்துமாறும், அவற்றைக் கண்காணிக்குமாறும் கோருகின்றோம்.''

இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.