தமிழா தலை நிமிர்...

Wednesday, April 8, 2009

பிரபாகரன் மீது துரும்பு விழுந்தால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்: வைகோ

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்கதேசம் போல தமிழீழமும் மலர்ந்திருக்கும். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் சுட்டுக்கொன்றான். அது கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் தொடர்புடைய ஜெகதீஸ் டைட்லர் குற்றமற்றவர் என்று மத்திய புலனாய்வுப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒரு சீக்கிய செய்தியாளர் வினா எழுப்பியபோது, கிண்டலாக விடையளித்துள்ளார். அதனால் அவர் மீது அந்த சீக்கிய செய்தியாளர் செருப்பை வீசியிருக்கிறார். ஆனால் அந்த செருப்பு அவர் மீது படவில்லை. அதற்காக அகாலிதளம் அந்தச் செய்தியாளருக்கு 2 லட்சம் ரூபா பரிசு அறிவித்திருக்கிறது.

தமிழர்களும் வீரத்திற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். அதையும்
கொச்சைப்படுத்தியது கலைஞர் அரசு. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் ஒரு மடலை முதல்வர் கலைஞருக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த மடலில் இதுவரை சொல்லாத இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆறு மாதமாக போர் நிறுத்தம் தொடர்பாக பேசாத சோனியா, இப்போது போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்துகிறார் என்றால், அம்மடலே தேர்தல் இலாபத்திற்காக கலைஞரால் தயாரிக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் நாங்கள் துடித்துப் போவோம். அவர் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். புலிகளை அழிக்க முடியாது. சில பேர் கணக்குப் போடுகின்றனர். சிலர் கவிதை எழுதியும் வைத்திருக்கின்றனர். ஆனால் இறுதியில் விடுதலைப் புலிகளே வெல்வார்கள் என்றார் வைகோ.

முன்னதாக உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இலங்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர். சிறிலங்கா அரசுக்கு கடன் வழங்குவதற்கு அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் போர் நடப்பதால் கடன் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டன.

ஆனால் வளர்ச்சிக்காக என்று சொல்லி சிறிலங்காவுக்கு கடனை வழங்கிய ஒரே நாடு இந்தியாதான். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்களாக நாங்கள் போராட்டம் நடத்த வந்தோமே தவிர வாக்கு கேட்பதற்காக அல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் உரையாற்றிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ஈழத் தமிழர்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றனர். அங்கு சிங்கள அரசு விச வாயு குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று வருகின்றது.

உலக நாடுகள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நாமும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகின்றோம். தமிழக மக்கள்
நடுவில் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.