வன்னியின் பாதுகாப்பு வலயம் மீது இறுதிக்கட்டத் தாக்குதலுக்கு தயாராகி வரும் படையினர் மிக மோசமான தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது களமனையில் மிக மோசமான இழப்புக்களை சந்தித்து வரும் படையினர் பெரும் அழிவுகளைச் சந்திப்பதற்கு இடையில் தமது முழுமையான பலத்தைப் பயன்படுத்தி மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து தாக்குவதற்கு தயாராகி வருவதாக சிறிலங்கா தரப்பு செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர் பெரும் வெற்றிச் செய்தியொன்றை அறிவிப்பதற்கு காத்திருக்கும் சிறிலங்கா, மிக மோசமான தாக்குதல் ஒன்றை நடத்தவுள்ளதை களமுனைச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
ஏற்கனவே, இந்திய ஆட்சியிலுள்ள கொங்கிரஸ் மத்திய அரசும் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தமது முழுமையான படை வளத்தைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடுப்பதற்கு சிறிலங்கா முடிவு செய்துள்ளது. படையினர் இவ்வாறான ஒரு பாரிய நடவடிக்கையில் இறங்கினால் ஏற்கனவே தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் படையினரால் படுகொலையாகி வரும் நிலையில், இவ்வாறான தாக்குதல் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் ஆயிரக்கணக்கான மக்களை உயிரிழக்க வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிக்குள் ஐந்து முனைகளில் ஒரே வேளையில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு உட்பிரவேசிப்பதற்கு சிறிலங்கா படையினர் தயாராகி இருப்பதாக களமுனை மற்றும் கொழும்பு படைத் தலைமையக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பச்சைப்புல்மோட்டைப் பகுதி கடுமையான மோதல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயப் பிரதேசம் படையினரால் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற கடுமையான மோதல்களையடுத்தே இப்பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்பகுதியைப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் 58 ஆவது படையணியினர், 53 ஆவது படையணியினருடன் இணைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையிலேயே சிறிலங்கா படையினரின் பலம் வாய்ந்த ஐந்து படையணிகள் வன்னியில் பெருந்தொகையான பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஐந்து முனைகளினால் பிரவேசிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பதையிட்டு களமுனைத் தளபதிகளுடன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவதற்காகவே சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை அவசரமாக வவுனியாவுக்குச் சென்றிருந்ததார்.
களமுனையில் உள்ள முக்கிய மூத்த தளபதிகளும் இராணுத் தளபதியுடனான இந்தச் சந்திப்புக்காக நேற்று அவசரமாக வவுனியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இராணுவத் தளபதியுடனான ஆலோசனைகளையடுத்து களமுனைத் தளபதிகள் உடனடியாகவே முல்லைத்தீவுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு முக்கியமான உத்தரவுகளை இராணுவத் தளபதி பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னிப் போர் தீவிரமடைந்த போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவின் கடற்கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயமாக அறிவித்த சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோரப் பகுதிகளே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் தற்போது சுமார் மூன்று இலட்சம் மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா படையின் 55 ஆவது படைப்பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 53 ஆவது படைப் பிரிவு, 59 ஆவது படைப் பிரிவு மற்றும் சிறப்புப் படைப்பிரிவு - 8 என்பன இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதியைத் தற்போது சுற்றிவளைத்திருப்பதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படைப் பிரிவுகள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் ஒன்றை நடத்தி அதற்குள் பிரவேசிப்பதற்குத் தயாராக இருப்பதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
இருந்தபோதிலும், இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்திருப்பது படையினருடைய திட்டங்களைச் சீர்குலைப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதாக அமைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
படையினரின் முன்னரங்க நிலைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ள விடுதலைப் புலிகள், சிறிய குழுக்களாக படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளுக்குள்ளும் பிரவேசித்து தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
கடந்த வாரத்தில் மட்டும் விசுவமடு மற்றும் கொக்காவில் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்ற விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான தக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தியிருப்பது படையினருடைய திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.