தமிழா தலை நிமிர்...

Friday, April 3, 2009

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு - ஹிலாரி கிளின்டன்

இலங்கை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்னெடுக்கப்பட இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் வாதியான மேரி ஜோ கில்ரோயிக்கு எழுத்தியுள்ள பதில் கடிதத்தில் அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 9ஆம் திகதி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து மேரி ஜோய் கில்ரோய் விளக்கம் கோரி கடிதம் ஒன்றை ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பியிருந்தார்.

இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும் வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் தமது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சர்வதேச உதவு நிறுவனங்கள், உதவி வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் தாம் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன.

அத்துடன் இடம்பெயர்ந்து மக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என கடித்தில் தெரிவித்துள்ளார்.