தமிழா தலை நிமிர்...

Wednesday, June 3, 2009

களத்தில் இறுதியாக நடந்தது என்ன?- தமிழ் மக்கள் முன் இன்றுள்ள பாரிய பணி: செ.பத்மநாதன் விளக்கம்

தமிழர் தாயக களத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தியலைகள்' நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்?

எனது அண்ணன் நடேசன், தம்பி புலித்தேவன் இவர்களின் மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. எமது மக்கள் மிகவும் கொடுமையாக எதிரிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டபோது - ஒவ்வொரு கணமும் எமது உடன்பிறப்புகள் சுட்டுவீழ்த்தப்பட்டபோது - நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்கள் இருவரும் என்னுடன் கலந்துரையாடினார்கள்.

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசினோம். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊடாக - சிறிலங்கா அரச தலைவரின் ஒப்புதலின்படி - நடேசன், புலித்தேவன் ஆகியோர் இராணுவ முகாமுக்கு சென்று கலந்துரையாடுவற்காக வெள்ளைக் கொடியுடன் சென்றுகொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.

அதேபோன்று பொதுமக்கள் சிலரும் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்தது. இதுதான் உண்மை.

நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் சரணடைவது குறித்த தகவல் தமக்கு கிடைத்ததாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

சரணடைவு குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே சிறிலங்கா தரப்புடன் பேசப்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய அமைச்சர் ஒருவரும் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கத்தோலிக்க ஆயர்களும் அங்கு செல்வதாக இருந்தது. அந்த சம்பவம் ஏதோ காரணத்தினால் நடைபெறாமல் போய்விட்டது.

எனினும் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புலிகளை நேரடியாக வந்து பேசலாம் என்று சிறிலங்கா தரப்பில் எமக்கு கூறப்பட்டது.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது எமக்கு தெரியாது. ஆனால் சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவுப்படியே இந்த சரணடைவு நடைபெற்றது என்பது அப்பட்டமான உண்மை.

இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த மக்களை பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் நடவடிக்கையில் நீங்கள் இறுதி நாட்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தீர்கள். இதற்கு ஏதேனும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தனவா?

அனைத்துலக ரீதியில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சிறிலங்கா அரசு பல்வேறு காரணங்களை கூறி எமது முயற்சிகளை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது.

கடைசித் தருணத்தில் அதாவது மே 16 ஆம் நாளும் நாங்கள் போர்நிறுத்தம் குறித்து பேசுவதற்கு முயற்சிகள் எடுத்தோம். அவர்கள் அதனையும் தட்டிக்கழித்தனர். அனைத்துலக அரசுகள் கூட எவ்வளவோ அழுத்தங்களைக் கொடுத்தும் சிறிலங்கா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

சிறிலங்கா படையினரால் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மக்களுக்காக - அங்கே நாளாந்தம் உயிரிழக்கும் முதியவர்களுக்காக - அங்கே கடத்தப்பட்டு காணாமல் போகும் எமது உறவுகளுக்காக - நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன?

எமது இனம் ஊனமாக்கப்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளில்தான் எமது இனத்தின் தலைவிதி இன்று தங்கியிருக்கின்றது. நாம் ஒரு அரசியல் சுனாமியை சந்தித்து, அந்த அழிவின் வருத்தத்தில் இருக்கின்றோம். எனவே புலம்பெயர் வாழ் மக்கள் தமது உடன்பிறப்புக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு - எந்தவித வன்முறையையும் தொடாமல் - போராட்டங்களை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவும்படி அந்த நாடுகளின் அரசுகளை கேட்க வேண்டும். அந்த அரசுகளின் அனுதாபத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். எனவே, அனைவரும் வேறுபாடுகளை மறந்து முன்வந்து எமது இனத்தை காப்பாற்றுங்கள். முள்வேலிகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை வெற்றிடமாகியுள்ள நிலையில் - தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்?

மிகவும் கடுமையாக அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகவிரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.

தமிழ் இன அழிப்பின் இறுதிக்கட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களை சேர்த்து அவற்றை மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்க வேண்டிய வரலாற்று பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது. புலம்பெயர் வாழ் நாடுகளில் உறவுகள் வசித்து வருகின்றனர். எங்களிடம் தங்களது உறவுகள் குறித்து நலம் விசாரிக்கின்றனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கு நாங்கள் முயற்சித்தபோதும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த கட்டமாக சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டிய தேவை உள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் இது குறித்து பேசியுள்ளேன். அவர்களும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும் இது குறித்த உதவிகளை நான் கேட்டிருக்கிறேன். சில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேசி வருகின்றேன். முடிந்தவரை அவற்றை வெகுவிரைவில் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.

ஆனால், அதற்கு முன்னர் எமது மக்கள் பசியால் வாடவோ அன்றி உணவின்றி இறப்பதையோ நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள்.

எனது அன்பு உடன் பிறப்புகளே! அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களே!!

அங்குள்ள உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். அதுவே அவர்களை வாழ வைக்கும்.

நாங்கள் எந்த உதவியை செய்வதானாலும் சிறிலங்கா அரசுடன் ஊடாகவே மேற்கொள்ளவேண்டியுள்ளது. மாறாக எமது மக்களை இந்த உதவிகள் நேரடியாகச் சென்றடையக் கூடிய பேச்சுவார்த்தைகள் எதையாவது நீங்கள் மேற்கொள்கின்றீர்களா?

சிறிலங்கா அரசு இந்தப் போரில் ஒரு வெற்றியைக் கண்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் அனைத்துலக நிறுவனங்களை அங்கே அனுமதிக்க தயங்குகின்றனர். எமது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் - இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவே எந்த வழியில் சென்றாலும் அது மக்களை சென்றடைந்தால் அது போதும் என்றே நான் கருதுகின்றேன்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டன என்று கருதலாமா?

அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.

மக்களுக்கான தீர்வு குறித்து ஏதாவது சிந்தனைகள் உள்ளதா?

எமது இனம் மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு ஒரு தீர்வு அவசியம். இது குறித்து நாம் எமது பலதரப்பட்ட பிரிவினர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் அரசியல் அபிலாசையை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை செயலாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். விரைவில் இது குறித்த முழு விபரமும் வெளியிடப்படும்.

அனைத்துலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் எந்தவகையிலான முயற்சிகளை நீங்கள் எடுக்கின்றீர்கள்?

அனைத்துலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் - பாரிய சுமைகளை எல்லாம் எமது தோளில் மட்டும் சுமத்தாதீர்கள். ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உரிய கடமை அது. அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் நல்ல உறவைப் பேணும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எம்பக்கம் திருப்பும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?

முதல் வேலையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.

நீங்கள் தற்போது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கும் விடயம் எதுவென கூறமுடியுமா?

இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுவதற்கும் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் தீர்வு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகின்றேன்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் துயருக்கும் சோர்வுக்கும் மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு சூறாவளி எமது இளம் தலைமுறையை அடித்து சென்றுவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய காலம் இது.

கவனயீர்ப்பு போராட்டங்களின் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நாங்கள் என்ன செய்தியை கூற வேண்டும்?

சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகளை - எமது தங்கைகளை படையினர் கொடுமைப்படுத்துவதை - எமது இளம் சிறார்கள் பெற்றோருடன் சேரவிடாமல் பிரிக்கப்பட்டிருப்பதை - முதலில் நாங்கள் அனைத்துலகத்தின் கண்களில் நிறுத்த வேண்டும்.

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.

இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.

எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.

இது சாதாரண குடும்ப - மனித - வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன்.

எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.

நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார்.

இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும்.

எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.

எனது தலைவர் கூறிய அவரது கனவான -

எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக்கொடுப்பதற்கு - எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.

திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.

நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தற்போதைய நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கூற முடியுமா?

நான் ஏற்கனவே கூறியதன்படி இந்த சுனாமியினால் மனம் நொந்திருக்கும் எமது உறவுகள் மீண்டும் எழ வேண்டும். மீண்டும் நாம் எமது கடைமையை ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். அதனை உடனே செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் எமது உறவுகள் எமது நாட்டில் மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நாம் தாங்கொணா துயரத்தை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமது நெஞ்சம் வெடிக்கின்றது.

இருந்தாலும் எமது உறவுகளுக்காக நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அந்த கடைமையை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் எமது உறவுகள் ஒன்றுசேர வேண்டும். உங்களுடைய கடைமை பாரியது.

முதற்கட்டமாக அனைவரும் ஒன்றுகூடி எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். அந்த நம்பிக்கை அவர்களை வாழ வைக்கும்.

எனவே அதனைச் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய நிலையில் தமிழ் ஊடகங்களின் பங்கு எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும் என்பது பற்றி கூறமுடியுமா?

ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்காக இங்கேயுள்ள மக்களை ஒன்றுதிரட்டும் பணியை இந்த ஊடகங்கள் செய்ய வேண்டும்.

வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருங்கள். எமது பலத்தை காட்டுங்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து இங்கு எமது பலத்தை காட்டினால் அங்கேயுள்ள எமது மக்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள்.

இந்த ஊடகங்கள் அதனை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும்.