முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கவலை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது.
நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும்.
இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் வாழும் செட்டிக்குளம் முகாம்களுக்கு நான் சென்றிருந்தேன். அவர்களின் பரிதாப நிலையை என்னால் விளக்க முடியாது. அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அளவற்ற துன்பத்துக்கும் இடர்களுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.
நமது பகுதிகளில் நாம் மாபெரும் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். ஆனால் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் தங்கியுள்ளனர். கூடாரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும்.
கூடாரத்தின் மற்ற பக்கத்தில் நிமிர்ந்தால் கழுத்து முறிந்துவிடும். கழிப்பிடங்களுக்குச் செல்வதற்குக்கூட அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.
இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.
இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.