தமிழா தலை நிமிர்...

Wednesday, June 3, 2009

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்...

சிறீலங்கா அரசின் கண்மூடித்தனமான படை நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருந்தது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்...அதேவேளை, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிற்சலாந்து, மெக்சிகோ, பிரேசில், சிலி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்த 17 நாடுகளில் அடங்கியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இஸ்ரேல், சிறீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

சிறீலங்கா அரசின் கண்மூடித்தனமான படை நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்திருந்த இஸ்ரேல், சிறீலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.

இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக இஸ்ரேலுடன் கலந்துரையாடப்போவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் நாடுகள் சார்பாக தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் செக் குடியரசும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. ஆனால், சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் சிறீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அது தெரிவித்திருக்கின்றது.

மோதல்களின் பின்னர் நாம் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பலவந்தமாக காணாமல் போதல், தடுத்துவைத்தல், கடத்தல், கருத்து சுதந்திரத்தை தடுத்தல் போன்றவை கவலையை தருகின்றன எனவும் செக் குடியரசு தெரிவித்துள்ளது.

சிறீலங்காவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் செக் குடியரசும் ஒரு முக்கிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை அது எடுத்திருந்தது. இதேவேளை, இந்த வாக்கெடுப்பில் சிறீலங்காவிற்கு ஆதரவாக இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஷ்யாவும் குரல் கொடுத்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐ.ஏ.என்.எஸ் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கட்டார், ஜோர்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கானா, நிக்கரகுவா, பொலிவியா, சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா, எகிப்த் ஆகிய நாடுகள் சிறீலங்காவிற்கு ஆதரவான வாக்குகளை வழங்கிய நாடுகளில் அடங்கியுள்ளன.

கியூபாவும் சிறீலங்காவுக்கு ஆதரவு தெரிவித்தது. முன்பு பல நாடுகளை ஆண்ட நாடுகள் தற்போது சிறிய அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை சிறுமைப்படுத்துவதாக கியூபா குற்றம் சாட்டியுள்ளதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக சாடியிருந்தது.

இதில் தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை ஆதரித்த தென் ஆபிரிக்காவும் சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் தனது ஆதரவை வழங்கியிருந்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறீலங்கா தொடர்பாக மேற்கு நாடுகள் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக இந்தோனேசியா குற்றம் சாட்டியது. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு தமது உரிமை மீறல் விசாரணைகளில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் கொண்டிருப்பதாக இந்தோனேசியா சாடியுள்ளது.

இதேவேளை, சிறீலங்காவின் படை நடவடிக்கையின் வெற்றியை இந்தியா உட்பட 14 நாடுகள் பாராட்டியுள்ளன. அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று சிறீலங்கா அரசாங்கத்தினால் இங்கு முன்வைக்கப்பட்டது.

அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதிலும் சிறீலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாடு கிடைத்துள்ளது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதுஇவ்வாறிருக்க, சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசின் அத்துமீறல்களை மூடி மறைத்து, அதனைப் பாதுகாக்க முயல்கின்றது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.