இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. தற்பொழுது இலங்கை பிரச்சினையானது இந்திய அரசியலில் பெரியளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் இலங்கை ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்திய அரசியலில் இலங்கை மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா அமைப்புகளும் அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும், பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டி வருகின்றன.
தமிழகத்தில் எழுந்துள்ள இலங்கை ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய முழுமைக்கும் ஒரு அரசியல் மாற்றத்தினை அமைக்கும் விடயமாக எழுச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இவ்வெழுச்சியை ஒடுக்கும் வகையில் இலங்கை சார்ந்த எவ்வித அறிக்கைகளும், சுவரொட்டிகளும், பதாகைகளும் அச்சடிக்கக் கூடாது என்று அச்சகத்தினர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.
மீறி அச்சடித்தால் அச்சகத்தினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.