பெற்ற பிள்ளையை, வறுமையின் காரணமாக தெருவிலும், குப்பையிலும் வீசிச் செல் லும் தாயை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், பள்ளி வாசமே இல்லாத 10 வயது சிறுமி, பெற்றோருக்கு ஐந்து ஆண்டுகளாக மூன்றுவேளை சோறிட்டு வருகிறாள்; இவளது மூலதனம் ஒரே ஒரு கயிறு. மேட்டுப்பாளையம், அண்ணாஜிராவ் ரோடு; வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதி. எப்போதும் "படுபிசி'யாகவே இருக்கும்.
இங்கு, தரையில் இருந்து 5 அடி உயரத்தில், 10 அடி நீளத்தில் கட்டப்பட்டிருக்கிறது கயிறு. அதன் மீது, எவ்வித அச்சமும் இல்லாமல் கையில் நீளமான குச்சியை பிடித்து, "பாலன்ஸ்' செய்தபடி சர்வசாதாரணமாக குறுக்கும், நெடுக்குமாக நடைபோடுகிறாள் 10 வயது சிறுமி. இடையிடையே கயிற்றின் மீது நின்றவாறு "டான்சும்' ஆடுகிறாள்; தவறி விழுந்தால்... நடப்பதோ வேறு. கயிற்றின் மீது நடக்கும் சிறுமியை உற்சாகப்படுத்த தரையில் அமர்ந்தபடி ஆணும், பெண்ணும் சாப்பாட்டு தட் டில் குச்சியை பலமாக அடித்து "இசை முழக்கம்' வேறு செய்கின்றனர். அருகில், மற்றொரு சிறுவன், வாத்தியத்தை முழக்குகிறார். இந்த ஒலி அருகில் இருப் போரை அழைக்கிறது.
ஏழைகளின் வயிற்று பிழைப் புக்கான இந்த சாகசக்காட்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அவ்வப்போது நிகழ்கிறது என்றாலும், ரசிகர்களுக்கு குறைவில்லை. தாளம் கேட்க ஆரம்பித்ததும், கூடிநின்று சிறுமியை ஒரு வித பரபரப்புடன், ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்க துவங்கிவிடுகின்றனர். கயிற்றின் மீது நடக்கும் போது, ஒரு காலில் இருந்த செருப்பை லாவகமாக கழற்றி கீழே விடுகிறாள். ஒரு காலில் செருப்பு, மறுகாலில் அலுமினிய சாப்பாட்டு தட்டை கயிற்றின் மீது வைத்தபடி முன்னும், பின்னுமாக நடக்கிறாள். இது போன்ற பல சாகசங்களை கயிற்றின் மீது நிகழ்த்தியபின், தரையில் குதித்து பாத்திரத்தை கையில் ஏந்தியபடி, கூடியிருப்போரிடம் சில்லரை கேட்கிறாள்.
நீண்ட நேரம் ரசிக்க வைத்தாளே... என நினைத்து பலரும் நாணயங்களை தட்டில் போடுகின்றனர். சிலர், ரசிக்க மட்டும் செய்துவிட்டு "நாணயமின்றி' கைவிரித்து நழுவிச் செல்கின்றனர். "கயிறு சாகசக்காரி' சிறுமி கீர்த்தி(10) கூறுகையில், ""நாங்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.ஐந்து ஆண்டுகளாக ஊர், ஊராகச் சென்று இது போன்ற சாகசம் செய்து, கிடைக்கும் சில்லரை காசுகளை கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை தேறும். இரவில், கோவில், பஸ் ஸ்டாண்ட் என ஏதாவது ஓரிடத்தில் படுத்து தூங்குவோம். மறுநாள் மீண்டும் கிளம்பிவிடுவோம். நான் பள்ளிக்கு போனதில்லை; வகுப்பறை எப்படி இருக்கும் என்றே தெரியாது,'' என்றார்.