இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நிவாரணப் பொருட்களை திரட்ட கொங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், வரும் 12ஆம் திகதி முதல் நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 12ஆம் திகதி முதல் இலங்கைத் தமிழர் நிவாரண உதவி என்ற பெயரில் அவர்களுக்கான புதிய வேட்டி, சேலைகள் மற்றும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களுடைய முழு விருப்பத்தின் பேரில் திரட்டப்படும்.
இந்த உதவிப் பொருட்களை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் வரும் 15ஆம் திகதிக்குள் சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பி வைப்பார்கள். இதேபோல புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கு உதவிப் பொருட்கள் திரட்டப்படும்.
இவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை குழு மூலம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனுப்பி வைப்போம். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார்.
இலங்கையில் தமிழினப் படுகொலையில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியே ஈடுபடும், சிறிலங்கா இராணுவத்திற்கான முழுமையான உதவிகளை வழங்கிவருவதும் தெரிந்ததே. இத்தனை நாட்களும் மக்கள் பெரும் அழிவுகளைச் சந்தித்தபோது அதனைத் தடுத்து நிறுத்ததாத கொங்கிரஸ் தற்போது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இவ்வாறான உணவு சேகரிப்பில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே தி.மு.க. அரசினால் அனுப்பப்பட்ட பொருட்களே மக்களை சென்றடையாமல் பெருமளவில் சிங்களவர்களையே சென்றடைந்துள்ளது. இந்நிலையில், போரை நிறுத்தாமல் இந்தப் பொருட்கள் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழின உணர்வாளர்கள் தமிழக மக்கள் இவர்களின் இந்த தேர்தல் நாடகத்தை புரிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.