தமிழா தலை நிமிர்...

Thursday, March 12, 2009

தமிழக அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை


தமிழக அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.

செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள் தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது.அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன.

இந்தியாவின் ஆயுத உதவியும் ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு அளவின்றி வழங்கப்படுகிறது என்ற உண்மை இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் அதை மறைப்பதற்கு தேவையான நாடகத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு தந்தி மனிதச் சங்கிலி பிரணாப் பயணம் மீண்டும் மனிதச் சங்கிலி என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது தி.மு.கவின் சுற்று அரசியல்.

இதில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட ஈழத்திற்காக போராடுகிறது என்று வெட்கமில்லாமல் தங்கபாலுவின் தலைமையில் அறிக்கைகள் விட்டு வருகிறது. ஆனால் இலங்கைக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் கொக்கரித்திருக்கிறார் ப.சிதம்பரம். போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என்றும் அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு சரணடைவு மூலம் பேச வேண்டுமெனவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதைத்தான் ராஜபக்க்ஷே அரசு பேசி வருகின்றது.

இந்த முகாந்திரத்தில்தான் முல்லைத்தீவில் சிக்கியிருக்கும் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசின் போர் நிறுத்தப் படவேண்டும் என்று நாம் கோரினால் இல்லையில்லை விடுதலைப்புலிகளை வீழத்தும் வரை போர் தொடரும் என்று இனப்படுகொலையை நியாயப் படுத்துகிறார்கள். மேலும் புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பேச முடியாது என்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் ப.சிதம்பரம். ஆனால் இவர்கள் அரசு ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளோடு பேச்சுவாரத்தை நடத்தியதும் எட்டு ஆண்டுகளாக நாக விடுதலைப்படையோடு நாகலாந்தில் பேச்சு வார்ததை நடத்தி வருவதும் எப்படி நடந்தது? இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே? இசுரேல். பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதும் ஈராக்கில் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதும் உண்மையாக இருந்தாலும் இவர்களை எதிர்த்துப் போராடும் மக்கள் பிரிவினர் ஆயுதங்களை ஏந்தினால் அது தவறு என்றால் எதுதான் சரி?

பிரச்சினை விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களா துறந்தார்களா என்பதல்ல. ஈழத்த் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. இந்தப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றாலும் அது ஈழத்து மக்களின் பிரச்சினை. புலிகள் போரை நிறுத்தட்டும் ஈழத்திற்கு சுய நிர்ணய உரிமை அளிக்கிறோம் என்று பேசலாமே? முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது?

ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது? ஆக அரசியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பதுவதோடு புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அம்மக்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக் கணக்கில் அகதிகளாக அலைவதும் போரில் மாட்டிக்கொண்டு உயிரைத் துறப்பதும் ஊனமாவதும் தான் இதுவரை உலகம் கண்டறிந்திருக்கிறது. இதற்காகத்தான் முத்துக்குமாரும் முருகதாஸூம் மற்றவர்களும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கி உலக நாடுகளை போரை நிறுத்துமாறு கெஞ்சுகிறார்கள்.

இவர்கள் யாரும் புலிகளுக்கு ஆயுதம் தூக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக உயிர் துறக்கவில்லை. உயிர் துறக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் உயிர்களை அழித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேரை களப்பலி கொடுத்திருக்கும் ஈழத்தின் போராட்டத்தை முடித்து விடுதற்கு இந்தியாவும் இலங்கையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் ப.சிதம்பரத்தின் திமிரான பேச்சு வெளிப்படுத்துகிறது.தமிழகத்தில் இத்தனை பெரிய மக்களின் எழுச்சிக்குப் பிறகும் காங்கிரசு கட்சி தனது துரோகக் கொள்கையை கூட்டம் போட்டு பேசுகிறது என்றால் தமிழ் மக்கள் என்ன இளித்தவாயர்களா?

எதிரிகளைக் கூட போரில் சந்தித்து வெல்ல முடியும். ஆனால் உள்ளிருந்தே துரோகம் செய்யும் இந்தக் கருங்காலிகளை ஈவிரக்கமின்றி வீழ்த்த வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கிறது என்று நீருபிக்க முடியும்.காங்கிரசின் இந்த அடிவருடிக் கொள்கை தான் எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றன. கருணாநிதி ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. இந்திய அரசின் கொள்கை என்பது கட்சிகளின் நலனுக்கு அப்பாற்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தீர்மானிக்கப்படுகிறது. இதில் காங்கிரசு ஈழத்திற்கு துரோகம் புரிகிறது. ப.சிதம்பரத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தால் விளக்குமாறு வரவேற்பு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.