தமிழா தலை நிமிர்...

Tuesday, March 10, 2009

இந்திய மொழிகளில் அகராதிக் கலை

சென்னை : "இந்திய மொழிகளில் அகராதிக் கலை' பற்றிய தேசிய கருத்தரங்கம் சென்னையில் வரும் 26ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனம் சார்பில், "இந்திய மொழிகளில் அகராதிக் கலை' பற்றிய தேசிய கருத்தரங்கம் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்களில் நடக்கவுள்ளது. தேசிய அளவில் பல மொழிகளை சேர்ந்த அறிஞர்கள் பலர் ஒன்றுகூடி, இந்திய மொழிகளில் அகராதிக் கலை தொடர்பான சிக்கல்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி விவாதிக்க இக்கருத்தரங்கம் நடக்கிறது.

மூன்று நாட்கள் நடக்கவுள்ள இக்கருத்தரங்கில், தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, இந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, அசாமி, ஒரியா போன்ற பல இந்திய மொழிகளை சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்குகிறார்கள்.

அவரவர் மொழிகளில் அகராதிகள் தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள், அகராதிகள் வளர்ச்சி பெற்ற விதம், அகராதிகளை திறம்பட உருவாக்குவதற்கு வேண்டிய வழிமுறைகள், நோக்கங்கள், நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான செயல்முறைகளை அறிஞர்கள் விவாதிக்கின்றனர். மேலும் விவரங்களை ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேலை, 2450 0831, 2450 2212 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.