தமிழா தலை நிமிர்...

Tuesday, March 10, 2009

வக்கீல்களுக்கு ஆயுதப்பயிற்சி

மதுரை : தற்காப்புக்காக வக்கீல்களுக்கு ஆயுதப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இதற்காக நிதி குவியத் துவங்கியுள்ளது. மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க மறு பரிசீலனை பொதுக்குழு கூட்டம் துணை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்தது. செயலாளர் ஏ.கே. ராமசாமி முன்னிலை வகித்தார். தீர்மானங்கள்: வக்கீல்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடக்கும். அத்துமீறல் சம்பவங்கள் நடப்பதால் தற்காப்புக்காக வக்கீல்கள், குமாஸ்தாக்களுக்கு கராத்தே, சிலம்பாட்டம், துப்பாக்கி சுடும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும்.

போலீஸ் மற்றும் அரசுத் துறையில் லஞ்சம், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நிலவுகிறது. அதைக் கட்டுப்படுத்த சங்கம் சார்பில் தனி புலனாய்வு பிரிவு முறைப்படி அமைக்கப்பட வேண்டும். வக்கீல்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கேட்டு மனு செய்யப்படும். தற்காப்பு பயிற்சிக்காக வக்கீல்கள் முருகதாஸ், மனோகரன் ஆகியோர் தலா ரூ.5,000 சங்கத்துக்கு வழங்கியுள்ளனர். மேலும் பல வக்கீல்கள் நிதி வழங்கவுள்ளனர்.

போராட்டம் தொடர்பான மறுபரிசீலனை கூட்டம் வரும் 12ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. துணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.