தமிழா தலை நிமிர்...

Friday, March 13, 2009

தூரிகைகளின் துயரப்பதிவுகள்


சென்னையில் கருத்துரிமைக் களம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'தூரிகைகளின் துயரப்பதிவுகள்' என்னும் தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஓவியர்கள் போருக்கு எதிராக ஓவியங்களை வரைந்தார்கள்.

சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல ஓவியர்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், பிரபல கேலிச்சித்திரம் வரைபவர்கள், காட்சி ஊடக மணவ மாணவிகள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிரபல கேலிச்சித்திரம் வரைவபரான மதன் நிகழ்வினை தொடக்கி வைக்க, சென்னை ஓவியக்கல்லூரி முதல்வரும் ஓவியருமான சந்துரு ஓவியம் வரைந்தார். பிரபல ஒவியர்களான வீரசந்தானம், மணியன் செல்வம், அரஸ், மாருதி, விஸ்வம், ஸ்யாம், மனோகர், நெடுஞ்செழியன், போன்ற பல பிரபல ஓவியர்களும் தங்கள் உணர்வுகளை ஓவியமாக வெளிப்படுத்தினார்கள். வரைந்து முடிந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்த போது பலரும் வந்து பார்த்து மனம் கலங்கிச் சென்றனர்.

இந்த ஓவியங்களை தியாகி முத்துக்குமார் நினைவோடு இணைத்து தமிழகம் எங்கும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி உரையாற்றிய போது திரைப்பட பாடலாசிரியர் தாமரை தெரிவித்துள்ளதாவது:

"இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்தும் இன்னும் இந்தப் போரை இலங்கை பேரினவாதிகள் நடத்துகிறார்கள் என்றால் அது இந்தியா கொடுக்கிற ஆதரவில்தான்.

இந்த லட்சணத்தில் இந்திய இறையாண்மை தொடர்பாக வாய் கிழியப் பேசுகிறார்கள் இவர்கள். இந்திய இறையாண்மைக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு வேட்டு வைக்கின்றது அதுதான் உண்மை.

வன்னியில் இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்ன பேரினவாதிகள் இப்போது எழுபதாயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் ஒரு லட்சம் மக்களை குண்டு வீசிக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறர்கள் என்று தானே பொருள்.

தமிழக மக்களுக்கு பதில் சொல்லும் காலம் இன்று வந்திருக்கிறது. ராஜீவ் கொலையால் 18 ஆண்டு காலம் நம்மை தண்டித்தார்கள். இதே 18 ஆண்டு காலம் நாம் காங்கிரசை தண்டிக்க வேண்டும். அதற்கான துருப்புச் சீட்டுதான் இப்போது நம்மிடம் இருக்கிறது" என்று உணர்வுபூர்வமாக உரையாற்றினார் கவிஞர் தாமரை.

கருத்துரிமைக் களத்தின் அமைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி கலந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்திய ஓவியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.