தமிழா தலை நிமிர்...

Saturday, March 21, 2009

விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானது: கனடா

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் அவர்களின் கொடியினை தாங்கிச்செல்வது சட்டபூர்வமானது என கனடா நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளதாக கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்துமாறு கோரி கனடாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போராட்டங்களில் அண்மையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் விடுதலைப் புலிகளின் கொடியினை வெளிப்படையாக அசைத்து தமது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.

அங்கு தனிநாடு கோரி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி அதுவாகும்.

இதனைத்தொடர்ந்து, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானதா என ஆராயப்பட்டது.

ஆனால், அது சட்டவிரோதமற்றது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மார்க் போகேஷ் தெரிவித்துள்ளார்.

எமது வழக்கறிஞர்களிடம் இருந்து நாம் ஆலோசனைகளை பெற்றுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.